மேற்கத்திய உலகின் தத்துவ ஞானி சாக்ரடீஸ் | Socrates, the philosopher of the Western world

மேற்கத்திய உலகின் தத்துவ ஞானி சாக்ரடீஸ்..!

Socrates, the philosopher of the Western world ..!



தத்துவ ஞானி சாக்ரடீஸ்..!

சாக்ரடீஸ் (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர்கள் ஜெனோபன் (Xenophon) மற்றும் பிளேட்டோ (Plato) ஆகிய இவர்களும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்கள். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸ் என்பது இவருடைய சிறப்பாகும்.


சாக்ரடீஸின் பிறப்பு


        சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 2500 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவர் கிரேக்க நகரமான ´ஏதென்ஸ்´ இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலகட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி(அறிஞர்) என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி(அறிஞர்) என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார்.


சாக்ரடிக் கேள்வி (புதிர்)


        சாக்ரடீஸ் தனது போதனைகள் எதையும் எழுதி வைக்கவில்லை, ஆனால் இவர் கல்வி மையம் ஒன்றை ஏதென்ஸ் நகரில் உறுவாக்கி தன் மாணவர்களுடன் தர்க்க அடிப்படையில், கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு விளக்கம் செய்தவற்றை இவருடைய மாணவர்கள் (ஜெனோபன் (Xenophon) மற்றும் பிளேட்டோ (Plato) போன்றவர்கள்) எழுதியவைகள் மூலம் அவரது வாழ்க்கை மற்றும் சிந்தனை பற்றிய  தகவல்களின் ஆதாரங்களாக கிடைக்கின்றன. இந்த ஆதாரங்களின் சில  முரண்பாடான தன்மை சாக்ரடிக் புதிர் அல்லது சாக்ரடிக் கேள்வி என அழைக்கப்படுகிறது.




கேள்வி கேட்கும் திறன்


        சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்து கொள்வதே சாக்ரடீஸின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இது போன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் நகர மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.


குடும்ப வாழ்க்கை


        சாக்ரடீஸ் தனது 50வது வயதில் சாந்திப்பே(Xanthippe)வை மணந்தார். சாக்ரடீஸின் மனைவி அவரைவிட இளையவர்  அவளது வயது 40. இவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் பிறந்திருந்தனர். அவர்கள் லாம்ப்ரோக்கிள்ஸ், சோஃப்ரோனிஸ்கஸ் மற்றும் மெனெக்செனஸ் என பெயரிடப்பட்டிருந்தனர்.


சாக்ரடீஸின் மாணவர்கள்


        சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருக்கும் இடங்களில் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது. கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளை எல்லாம் சாக்ரடீஸையும் அவரது மாணவர்களையும் சிந்திக்க வைத்ததோடு அல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது. இதுபோல் சாக்ரடீஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோ, ஜெனோபன், ஆண்டிஸ்டீனஸ், அரிஸ்டிப்பஸ், அல்சிபியாட்ஸ், கிரிட்டியாஸ் ஆகிய பல இளைஞர்கள் சாக்ரடீஸுடன் சேர்ந்தனர். பின் நாளில் இவர்கள் எல்லாம் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார்கள்.




சாக்ரடீஸின் மீது குற்றச்சாட்டு


இளைஞர்களிடம் எற்பட்ட  மாற்றம் ஏதென்ஸ் அரசுக்கு தெரிய வந்தது. சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எல்லாம் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது. சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸும், லைகோனும், மெலிட்டஸும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில்   வழக்குத் தொடுத்தனர்.


நீதி மன்ற வழக்கு விசாரணை


        எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலகட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறினான் 


        இதற்கு நீதி மன்றத்தில் பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை இந்த வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் கொண்டுள்ளனர். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது தவறு என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ? என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டன. நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்கினர்.


        220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.


தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.


சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மரண தண்டனை இறப்பு


        சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாக்ரடீஸின் ஆதரவாளர்கள் சிறையில் உள்ள சிறைகாவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து  தப்பி செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால்  சாக்ரடீஸ் உண்மையான மெய்யியலை போதித்ததால்  தவறு செய்ய, தப்பி செல்ல மறுத்து விட்டார்.


        பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.


        “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு, சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார். விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் காலில் கிள்ளி உணர்வு தெரிகிறதா? என சாக்ரடீஸிடம் கேட்க, அவர் “இல்லை” என கூறிய பின் உணர்வற்ற நிலை சிறிது சிறிதாக உடல் முழுவதும் பரவி அவரது உயிர் அவரின் உடலை விட்டு பிரிந்தது.


சாக்ரடீஸின் பங்களிப்பு


சாக்ரட்டீஸிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக் கருத்துக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்ரட்டீஸ் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக் கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.



Comments

Popular posts from this blog

கௌதம புத்தர் | Gautama Buddha

டாக்டர் ராஜேந்திர பிரசாத்..!

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு | Biography of the great leader Kamaraj